டிவி நடிகை தற்கொலை வழக்கில் நடிகருக்கு சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்துள்ளதுசெல்லமே மனைவி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் தேவ் ஆனந்த் (34). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இருக்கிறார். இவருடன் சில டிவி தொடர்களில் நடித்தவர் வைஷ்ணவி. இருவரும் நண்பர்களாய் பழகினர். இந்நிலையில் கடந்த 2006 ஏப்ரல் மாதம் வைஷ்ணவி தனது தாயுடன் மலேசியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக சென்றார். அப்போது, தேவ் ஆனந்த் மற்றும் சக நடிகைகளும் சென்றிருந்தனர்.
அங்கிருந்து திரும்பியதும் ஏப்ரல் 15ம் தேதி வைஷ்ணவியை கிழக்கு கடற்கரை சாலைக்கு தேவ் ஆனந்த் கூட்டிச் சென்றுள்ளார். அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு வைஷ்ணவி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவரது கண், முகம், மூக்கு ஆகியவற்றில் காயம் இருந்துள்ளது. இதுகுறித்து அவரின் பெற்றோர் கேட்டதற்கு தேவ் ஆனந்த், தன்னை 2ம் தாரமாக திருமணம் செய்ய வேண்டும் என்று மிரட்டினார். 
தன்னை திருமணம் செய்யவில்லை என்றால் வேறு யாருடனும் வாழ முடியாது என்று மிரட்டி தாக்கினார் என்று கூறியுள்ளார். இதையடுத்து, அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் 2 நாட்கள் கழித்து வீட்டில் தனியாக இருந்த வைஷ்ணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில் தேவ் ஆனந்த் மீது காயம் விளைவித்தல், தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சேதுமாதவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சிறப்பு அரசு வக்கீல் கவுரி அசோகன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் தேவ் ஆனந்துக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.10,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.



